தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு புத்தாடை, இனிப்பு பலகாரங்கள், பட்டாசு எப்படி முக்கியமானதோ, அதற்கு அடுத்தாக அசைவ விருந்து முக்கியமானது. அதிலும் குறிப்பாக கிடாக்கறி விருந்து முக்கியமானது. எனவே தான் தீபாவளி சீசன் நெருங்கி விட்டாலே ஆட்டு கிடாக்களின் விலை உச்சத்தில் ஏறிவிடும். ஆட்டு வியாபாரிகள் சந்தை சந்தையாக போய் ஆடுகளை வாங்கவும், விற்கவும் செய்வார்கள்.
தீபாவளியையொட்டி இன்று நள்ளிரவு முதலே ஆட்டுக்கறி விருந்து கமகமக்கும். இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தின் முக்கிய ஆட்டுச்சந்தையான சமயபுரம் ஆட்டுச்சந்தை சனிக்கிழமையான இன்று வழக்கம் போல கூடியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வேன், லாரிகளில் கொண்டு வரப்பட்டது. வழக்கத்தை விட அதிக அளவில் இன்று ஆட்டு கிடாக்கள் கொண்டு வரப்பட்டன.
சமயபுரம், மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, பாடாலூர், கல்லக்குடி, விராலிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தாங்கள் வளர்த்த வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் ஆயிரக்கணக்கில் கொண்டு வரப்பட்டன.
இதை வாங்குவதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை தீபாவளி விருந்துக்காகவும், ஆட்டுக்குட்டிகளை வளர்ப்பதற்காகவும் வாங்கி சென்றனர்.
வழக்கமாக 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஆடுகள் இன்று 6ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. அதற்கு குறைந்த விலையில் ஆட்டு கிடாக்கள் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக முதல் 12000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனைக்கு போனது. கடந்த தீபாவளியை விட இந்த தீபாவளிக்கு விற்பனை நன்றாக இருந்ததாகவும் சுமார் 4 கோடிக்கு மேல் இன்று விற்பனை ஆகியுள்ளது எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். அதிகளவு ஆடுகள் கொண்டுவரப்பட்டதால் நேரம் ஆக ஆக கிடைத்த விலைக்கு ஆடுகளை விற்றுவிட்டு சென்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆடுகளின் விற்பனை படு ஜோராக நடைபெற்றது என வாங்கியோரும், விற்றோரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.