சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், அம்மன் கோவில்களில் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்திவிட்டு செல்வார்கள்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மன் ஏக தின லட்சார்ச்சனையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்கவும், நோய் நொடிகள் இல்லாமல் மக்கள் வாழவும், ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கவும், அனைவருக்கும் சகல சௌபாக்கியம் கிடைக்க வேண்டி 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.
இதையொட்டி சமயபுர மாரியம்மன் உற்சவர் அம்மன் தங்க கவசம் உடை அணிந்து சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணையாணையர் கல்யாணி தலைமையில் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.