சக்தி தலங்களில் பிரசித்த பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். தற்போது ஆடி மாதம் என்பதால் நடைபயணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து மாரியம்மனை தரிசித்து வருகின்றனர். இக்கோவிலின் நுழைவாயில் திருச்சி-சென்னை பழைய பை பாஸ் ரோட்டில் உள்ளது. ரோட்டில் இருந்து சுமார் ஒரு கோவிலுக்கு உள்ளே செல்ல வேண்டும். இதற்கென ரோட்டில் ஒரு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை செல்லும் பிரமுகர்கள் இந்த பழைய பைபாஸ் ரோட்டில் வழியாக வந்து வாகனங்களை நிறுத்தி நுழைவாயிலில் சூடம் ஏற்றி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் கோவிலுக்கு பால்குடம், காவடி எடும் பக்தர்களும் இந்த நுழைவாயிலில் இருந்து கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நுழைவாயில் வழியாக சென்ற லோடு லாரி இடது புற தூண் மீது மோதியது. இதனால் இடது பக்க தூண் மற்றும் மேல் புறம் பலத்த சேதமடைந்தது. இதன் காரணமாக சமயபுரம் முன்புற வளைவு எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவ்வழியான போக்குவரத்தை போலீசார் தடை செய்துள்ளனர். இன்றைய தினம் ஆடி 18 திருவிழா நாளை ஆடி அம்மாவாசை என்பதால் சமயபுரம் அம்மனை வழிபாடு செய்ய வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நுழைவாயில் வழியாக தான் செல்வார்கள். இத்தகைய சூழ்நிலையில் அவ்வழி போக்குவரத்தை போலீசார் தடை செய்துள்ளது மற்றும் நுழைவாயில் இடிந்தது சமயபுர பக்தர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது..