தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ..இதனால் இக்கோவிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தேரோட்ட விழாவை முன்னிட்டு
இன்று காலை கோயில் உள் பிரகாரத்தில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்ற விழா நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு அம்மன் வசந்த மண்டபத்தில் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். ஒவ்வொருநாளும் இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வருகின்ற 17-ந்தேதி அம்மன்
வெள்ளிகுதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் விழா வருகின்ற 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதனைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 19-ந்தேதி அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்திலும், 20-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார். 21-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 25-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள் , பக்தர்கள் செய்து வருகின்ளனர்.