திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சா.கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில்.
உலக புகழ்பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருவது வழக்கம்.
அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் ரூபாய் 100 கட்டணம் தரிசனம் , பொது தரிசனம் மற்றும் விஐபி தரிசன முறையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி வடக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்டச் செயலாளர் ச.குமார் சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி பரபரப்பு போஸ்டர் ஒன்றை சமயபுரம் பகுதி முழுவதும் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் மரபை மாற்றி உள்ளூர் பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்காமல் அராஜகம் செய்யும் சமயபுரம் மாரியம்மன் கோவில் இனை ஆணையர் திருமதி கல்யாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசின் இந்து சமய துறைக்கும் கோரிக்கை வைத்து போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களிடம் அதிக அளவில் பணம் பெற்றுக் கொண்டு
சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்களை விரைவாக சாமி தரிசனம் செய்து வெளியே அழைத்து வர 50க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் கோவிலை சுற்றி சுற்றி வருகின்றனர்.
இவர்கள் அங்கு கோவிலில் உள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு பணத்தை கொடுத்து அவர்கள் அழைத்து செல்லும் பக்தர்களை விரைவாக சாமி தரிசனம் செய்து பூ மாலை என தடபுடலாக கவனித்து பக்தர்களை வெளியே அழைத்து வருகின்றனர்.
ஆனால் உள்ளூர் பொதுமக்கள் சென்றால் ஆதார் கார்டு முதல் அனைத்து முகவரிகளையும் கேட்டும் மேலும் உள்ளே அனுமதிக்காமலும் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வதாக தொடர்ந்து புகார்கள் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கூடுதல் பணம் பெற்று பக்தர்களே உள்ளே கூட்டி செல்ல அங்கு சுற்றி வரும் நபர்கள் 20-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு சமயபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவில் தற்காலிக பணியாளர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு பக்தர்களை உள்ளே அனுமதித்ததாக இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.