புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய ஒரு சமூக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் அசுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கிராமத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக இன்று வேங்கைவயல் கிராமத்தில் சமத்துவ பொங்கல்விழா கொண்டாடப்பட்டது.
இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து கோயிலில் பொதுவழிபாடு நடத்தினர். பின்னர் பொங்கல் வைக்க தேவையான அனைத்து பொருட்களும் அனைத்து சமூக மக்களிடம் இருந்து பெறப்பட்டு அவற்றை ஒரே பானையிலிட்டு அங்கு சமத்துவ பொங்கல் வைத்து அனைவரும் அதை சாப்பிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 3 அமைச்சர்களுடன் கலெக்டர் கவிதா ராமு, புதுகை எஸ்.பி. பொறுப்பு சியாமளாதேவி, ஆதிதிராவிட நல இயக்குனர் ஆனந்த், மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், சின்னதுரை எம்.எல்.எ, இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, தாசில்தார் சக்திவேல், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஸ்ருதி, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக பங்கு கொண்டனர்.