கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைதாண்டி வருவாயா’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். தெலுங்கு படங்களிலும் பிரபலமானார். பின்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் விவாகரத்து பெற்றார். உடல் நலப்பிரச்னை ஏற்பட்டதால் 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காத சமந்தா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே நடிகை குஷ்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுக்கு கோவில் கட்டிய நம்முடைய ரசிகர்கள் இப்போது அந்த வரிசையில் சமந்தாவையும் சேர்த்து விட்டனர். ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர், சமந்தாவுக்கு கோவில் கட்டி உள்ளார். சமந்தாவின் மார்பளவு சிலை வைத்து, தினமும் அந்த சிலைக்கு பூஜை செய்து வருகிறார். அந்த கோவிலுக்கு ‘சமந்தா கோவில்’ என்ற பெயர் வைத்துள்ளார். தினமும் இருவேளை பூஜை நடக்கிறது. ஏராளமான பொதுமக்கள் தினமும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோவிலின் நுழைவு வாயிலில் சமந்தா கோவில் என பெயர் வைத்துள்ளார்.
நடிகை சமந்தாவின் இயற்பெயர் சமந்தா ரூத், சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர். ராணிமேரிக்கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். படிக்கும்போதே விளம்பர படத்தில் நடித்தார். பின்னர் நடிகையாகி விட்டார்.