இந்தியாவிலேயே குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் தான் உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தருவாய்குளம், வேப்பலோடை, ஆறுமுகநேரி, முல்லைக்காடு, பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழை காரணமாக உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு விலை உயர்ந்து வருவதால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், குஜராத், ஆந்திராவின் நெல்லூர், தமிழகத்தின் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு உப்பு வாங்கி வருகின்றனர். இதனால் போதுமான லாபம் கிடைப்பதில்லை என தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.