வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் என்ற முழக்கத்துடன், மே 5 வணிகர் தினமான இன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக திருச்சியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. வர்த்தகர் அணியின் மாநில தலைவர் கிண்டி அன்சாரி தலைமையில், பெமினா அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி துவக்கவுரை நிகழ்த்தினார். கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர். எம்எல்ஏ கதிரவன், விசிக துணைப் பொதுச்செயலாளர் கனியமுதன், டாக்டர் ரொக்கையா சேக் முகமது மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், வர்த்தக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மாநாட்டில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுகுறு தொழில்களின் வங்கிக் கடன்களை ரத்து செய்வதோடு, அந்த துறையை பாதுகாக்க புதிய வங்கிக் கடன்களை எளிய முறையில் வழங்க வேண்டும், ஸ்பாட் பைன் முறையை கைவிட வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிக்கப்படும் சில்லரை வணிகர்களை காக்க ஆண்டுக்கு ஒரு கோடிக்கு வணிகம் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும், ஒற்றைச்சாளர முறையில் வணிகர்களுக்கான உரிமம் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.