ஆடி மாதம் பிறந்து விட்டாலே சேலம் மாநகர் விழாக்கோலம் பூண்டுவிடும். பழைய பஸ்நிலையம் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் முதலில் பூச்சாட்டுதல் விழா நடைபெறும். அதைத்தொடர்ந்து சேலத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, குகை என அனைத்து பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் விழா தொடங்கி நடைபெறும். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் வீதிகள் தோறும் நடைபெறும்.
இதில் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கல் வைத்தல், அங்கபிரதட்சணம் மிகவும் பிரசித்தி பெற்றது. பல்லாயிரகணக்கான பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். நேற்று முன்தினம் இந்த நிகழ்ச்சி நடந்தது.
குகை மாரியம்மன் கோவிலில் நடைபெறும் வண்டி வேடிக்கையும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா நேற்று இரவு நடந்தது. பக்தர்கள் அலங்கார வண்டிகளில் கோவிலை வலம் வந்து செல்வார்கள். அலங்கார வண்டிகளில் மகாபாரதம், ராமாயண காட்சிகளையும், இறைவனின் உருவங்களையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி வேடமிட்டு வருவார்கள். இந்த காட்சியை காண பல்லாயிரகணக்கான மக்கள் தி்ரண்டனர். இதனால் நேற்று மாலை முதல் சேலம், தி்ருச்சி ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நள்ளிரவு வரை அலங்கார வண்டிகள் வந்து கொண்டே இருந்தது.