திமுக தலைமைக் கழக பேச்சாளரான சேலம் கோவிந்தன் திமுக மேடைகளில் சிறந்த பேச்சாளராக விளங்கி வருகிறார். பொதுக்கூட்டங்கள் இல்லாத நேரத்தில் தன்னை குடுகுடுப்பைக்காரர் போல அலங்கரித்துக்கொண்டு ஒவ்வொரு ஊரிலும் சென்று திமுகவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல் உள்ளிட்டவற்றில் இவ்வாறு அவர் குடுகுடுப்பைக்காரர் வேஷத்தில் திமுக ஆதரவு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று குடுகுடுப்பை பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தற்போது திருப்பூர் மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சாரத்தில் ‘இந்த தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார், மோடி இன்னொருமுறை பிரதமராக வந்தால் நாடு தாங்காது, அனைவருக்கும் உரிமைத் தொகை கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்’ என்று குடுகுடுப்பை அடித்தபடி இவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.