திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட மாவடைப்பு மலைவாழ் கிராமத்தில் இருந்து வாங்கிச் சென்ற சாராயம் குடித்து கோவை மாவட்டம் ஆனைமலை ஓன்றியம் மஞ்ச நாயக்கன் புதூரைச் சேர்ந்த கட்டட தொழிலாளி மகேந்திரன் மற்றும் அதே பகுதியில் டீக்கடை நடத்தும் ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 28ம் தேதி வாந்தி பேதி ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ரவிச்சந்திரன் மனைவி தமிழரசி அளித்த புகாரின் பேரில் நச்சுத்தன்மை கலந்த மது குடித்ததாக கோவை மாவட்டம் ஆழியாறு காவல்துறையினர் மாவடைப்பு மலை கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 28ம் தேதி இரவு 11 மணிக்கு மேல் மாவடைப்பு மழைவாழ் குடியிருப்பு பகுதிகளுக்குள் அதிரடியாக நுழைந்த திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர் வீட்டு கதவுகளை தட்டி தூங்கிக் கொண்டு இருந்த பெண்களிடம் விசாரணை என்ற பெயரில்
கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் காவல்துறையினரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனா்.்
பின்னர் ஊர் தலைவர் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தி காவல்துறையினர் சோதனைக்கு அனுமதிக்கப்பட்டனர் பின்னர் பழங்குடியினர் அனைவரையும் ஓர் இடத்தில் அழைத்து கள்ளச்சாராயம் எவ்வளவு கொடுமையானது என காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் மாவடைப்பு மலை கிராமத்தில் வாங்கிச் சென்று சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு கள்ளச்சாராயம் காரணம் அல்ல என மறுப்பு வெளியிட்ட நிலையில் கோவை மாவட்ட காவல்துறையினர் நச்சுத்தன்மை கொண்ட சாராயம் குடித்து தான் உடல் நலம் பாதிக்கப்பட்டது என மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த ராமன் மீது நேற்று இரவு வழக்குப்பதிவு செய்திருப்பது மலைவாழ் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.