கடந்த சில நாட்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதி இடையிலான 29 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவாக ரத்து அறிவிப்பை சாய்ரா பானு வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்துவருகின்றனர். குறிப்பாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏ ஆர் ரகுமானுக்கு எதிராக பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனக்கு எதிராக அவதூறு பரப்பும் நபர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். இந்நிலையில், சாய்ரா பானு ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் நான் சாய்ரா பானு பேசுகிறேன். நான் இப்போது மும்பையில் தங்கி இருக்கிறேன். யூடியூபர் மற்றும் தமிழ் மீடியா தயவு செய்து ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர். இந்த உலகில் மிகவும் நல்ல மனிதர். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை. மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். பிசியான காலகட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் இருக்கிறார். அவரையோ, என் குழந்தைகளையோ தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. விவாகரத்து குறித்து பொய்யான தகவலை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். விரைவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்புவேன். நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.