கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை. இந்த நிலையில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் பெற்ற வெற்றியை ராஜஸ்தானில் பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைகளின் முடிவில் இருவரும் இணைந்தே தேர்தலை சந்திப்பது என அறிவித்தனர்.
ஆனால் தற்போது காங்கிரஸில் இருந்து சச்சின் பைலட் விலகும் முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் பேரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சியை தொடங்க சச்சின் பைலட் திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. வரும் ஜூன் 11-ந் தேதி சச்சின் பைலட்டின் தந்தை மூத்த காங்கிரஸ் தலைவரான ராஜேஷ் பைலட்டின் மறைவு தினம். அன்றைய தினம் தமது தனிக்கட்சி குறித்த அறிவிப்பை சச்சின் பைலட் வெளியிடக் கூடும் என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.