புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு… சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பூஜை காலத்தில் தினமும் 80,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். இணையம் மூலம் முன்பதிவு செய்யும் போது எந்த வழியாக யாத்திரையை மேற்கொள்வது என்பதை தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். இம்முறை நிலக்கல், பம்பை பகுதிகளில் கூடுதல் வாகன நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் நிறைவு பெற உள்ளது இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
