கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. குறிப்பாக நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்லும் இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதனால் பக்தர்களின் வருகை இப்போதே எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மழையால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க கோவில் நிர்வாகமும், பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகமும் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. இதன்படி சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.