சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று தீபாராதனை வேளையில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். சபரிமலையில் பக்தர்கள் மண்டல பூஜையை ஒட்டி நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாளை (டிசம்பர் 9) மற்றும் 12ம் தேதிகளில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
நாளை (டிசம்பர் 9ம் தேதி) சபரிமலை தரிசனத்துக்கு இதுவரை ஆன்லைன் முன்பதிவு 1 லட்சத்து 4 ஆயிரத்தி 200 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த மண்டலம் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனத்துக்கு முன் பதிவு என்பது இதுவே முதல் முறை.
இதேபோல் டிசம்பர் 12ம் தேதி முன்பதிவு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. 1 லட்சத்து 3 ஆயிரத்து, 716 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல் இன்று 93 ஆயிரத்து 600 பேரும், 10ம் தேதி 90 ஆயிரத்து 500 பேரும், 11ம் தேதி 59 ஆயிரத்து 814 பேரும் தரிசனத்துக்கு இதுவரை முன் பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால், வரும் நாட்களில் கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சன்னிதானத்தில் இவ்வாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் தரிசனம் செய்யவும், பக்தர்களுக்கு வழிபாடுகள் செய்யவும் சிரமம் ஏற்படாமல் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.