Skip to content

சபரிமலையில் இன்று மகர ஜோதி.. லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்..

மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல் மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது. இதனையொட்டி இன்று மாலை 6.20 மணிக்கு அய்யப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி அய்யப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா… என்ற கோஷம் எழுப்புவர். இந்த ஆண்டு மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியில் குவிந்துள்ளனர். இதற்காக ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஏற்கனவே தங்கியுள்ளனர். மேலும் ஏற்கனவே மகரவிளக்கு பூஜை நாளில் சபரிமலைக்கு வருவதற்கு முன்பதிவு செய்தவர்களும் இன்று குவிய உள்ளனர்.எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு பணிக்காக பம்பை, சன்னிதானத்தில் 3 ஆயிரம் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே நேற்று சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!