மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று முதல் மகரவிளக்கு கால பூஜைகள் தொடங்கின. நேற்று முன்தினம் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும், நேற்று 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் தரிசனம் செய்தனர். இன்று புத்தாண்டு தினம் என்பதால் ஐயப்பனை தரிசிப்பதற்காக நேற்று மாலை முதலே ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். பல நாட்களுக்கு முன்பே இன்றைய தரிசனத்திற்காக பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக தினசரி ஆன்லைன் முன்பதிவு 90 ஆயிரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர உடனடி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று ஆன்லைன் மூலம் 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் உடனடி முன்பதிவு மூலமும் பக்தர்கள் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் இன்று 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலை முதலே சபரிமலை சன்னிதானம் பக்தர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. புத்தாண்டு தினத்தில் ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இன்று முதல் வரும் 8ம் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு அனைத்தும் முடிந்துவிட்டது. இதனால் இந்த நாட்களில் தினமும் சராசரியாக 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் ஜனவரி 19ம் தேதி வரை மட்டும் சுமார் 12.50 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர்.
