Skip to content
Home » ரஷியா கடும் எச்சரிக்கை.. பின்வாங்கிய வாக்னர் வீரர்கள்…

ரஷியா கடும் எச்சரிக்கை.. பின்வாங்கிய வாக்னர் வீரர்கள்…

வாக்னர் அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. பெரிய ஆயுதங்களை வைத்து கொடுமையான தாக்குதல் நடத்துவதற்கு பெயர் போன இந்த அமைப்பு பணம் பெற்று கொண்டு தாக்குதல் நடத்தும் கூலிப்படையாக செயல்பட்டு வருகிறது. உக்ரேன் போரில்  ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து, வாக்னர் ஆயுதக் குழுவும் போரில் ஈடுபட்டது. அந்தக் குழுவின் தலைவர் ஈவ்ஜெனி பிரிகோஸின் (62), அதிபர் புதினின் நெருங்கிய நண்பர். உக்ரைன் போரின்போது, ஈவ்ஜெனி பிரிகோஸினுக்கும், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கே ஷோய்கு, தளபதி வாலரி ஜெரசிமோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்னர் ஆயுதக் குழு அதிகாரப்பூர்வமாக ரஷ்ய ராணுவத்தில் இணைய வேண்டும் என்று தலைமை தளபதி வாலரி ஜெரசிமோவ் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஈவ்ஜெனி பிரிகோஸின் ஏற்கவில்லை. இதனால், வாக்னர் ஆயுதக் குழுவுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்க ரஷ்ய ராணுவம் மறுத்தது. இதற்கிடையில், உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் முகாமிட்டிருக்கும் இடங்களின் விவரங்களை எதிரிகளுக்கு ஈவ்ஜெனி பிரிகோஸின் வழங்கியதாக, ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் குற்றம் சாட்டின. இதன் காரணமாக, உக்ரைனின் பாக்மத் பகுதியில் முகாமிட்டிருந்த வாக்னர் ஆயுதக் குழு வீரர்கள் மீது, ரஷ்ய ராணுவம் அண்மையில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் உயிரிழந்தனர்.

இந்தப் பின்னணியில், ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் செயல்பட்ட ரஷ்ய ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தை வாக்னர் ஆயுதக் குழு நேற்று கைப்பற்றியது. அங்கிருந்தே உக்ரைன் போருக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அந்த நகரம் முழுவதும் தற்போது வாக்னர் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இது தொடர்பாக ஆயுதக் குழு தலைவர் ஈவ்ஜெனி பிரிகோஸின் டெலகிராம் செயலியில் நேற்று வெளியிட்ட பதிவில், “ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்கு மற்றும் ராணுவ தளபதி வாலரி ஜெரசிமோவ் ஆகியோர்தான், உக்ரைனுக்கு எதிரானப் போருக்கு காரணம். இவர்கள் இருவரும் ரோஸ்டோவ் நகரில் என்னை வந்து சந்திக்க வேண்டும். இருவரும் பதவி விலக வேண்டும். எங்களது வீரர்கள் இங்கிருந்து தலைநகர் மாஸ்கோ நோக்கி முன்னேறுவார்கள். குறுக்கே யாராவது வந்தால், அவர்களை அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, மாஸ்கோவில் அதிபர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் புதினுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

அதிபர் விளாடிமிர் புதின் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ரஷ்ய மக்களின் வாழ்வுக்காகவும், அவர்களின் பாதுகாப்பு, இறையாண்மைக்காகவும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய இந்தப் போரில், அனைத்து படைப் பிரிவுகளும் இணைந்து, ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம். இந்த தருணத்தில், நமது ஒருமைப்பாட்டை சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது நாட்டு மக்களுக்கும், போரில் ஈடுபடும் வீரர்களுக்கும் செய்யும் துரோகமாகும். மேலும், மக்களின் முதுகில் குத்தும் செயலாகவும் இருக்கும். நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுவோர், ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியைத் தொடங்கியவர்கள், அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாதப் பாதையில் சென்றவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கிடையே வாக்னர் அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் கோபமடைந்த ரஷியா, கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும் கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டுள்ளது. ரஷியா முழுவதும் ராணுவ படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் வாக்னர் குழு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டானிலிருந்து வீரர்களைத் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காக தனது படைகள் வெளியேறுவதாக வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்தார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!