திருச்சி அடுத்த பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் முத்தாத்தாள். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தத்திற்கு சொந்தமான வீட்டை 16 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்குவதாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இதற்காக முன்பணமாக ஆறு லட்சம் ரூபாயும், அதனைத் தொடர்ந்து இரண்டு லட்சம் ரூபாய் என மொத்தம் 8 லட்சம் ரூபாய் முருகானந்தத்திடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மீதமுள்ள 8 லட்ச ரூபாயை பத்திரப்பதிவு செய்தவுடன் அந்த அலுவலகத்தில் வைத்து செலுத்துவதாக தெரிவித்திருந்தார்.
மேலும் வீட்டை பத்திரபதிவு செய்வதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றபோது ஏற்கனவே அந்த வீட்டின் மீது வங்கியில் கடன் பெற்றுள்ளது தெரியவந்தது.
வங்கியில் வீட்டை வைத்து ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்று அது வட்டியுடன் சேர்ந்து தற்போது 9 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்த வேண்டும் என தெரிய வந்தது.
இதை அறிந்த முத்தாத்தாள் தனக்கு வீடு வேண்டாம் என்று கூறி அட்வான்ஸ் தொகையை திருப்பி செலுத்த முருகானந்தத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி சுமார் ஆறு வருட காலமாக பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார்.
இது தொடர்பாக பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் புகார் மட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த முத்தாத்தாள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் முத்தாத்தாளை மீட்டடனர். தொடர்ந்து அவரிடம் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், உங்களை ஏமாற்ற நினைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.