Skip to content

ரூ.706 கோடி., இந்தியாவின் பிரமாண்ட பெண்கள் விடுதி…..அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்.

  • by Authour

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கென 706 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகால் பகுதியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பெண்கள் குடியிருப்பு வளாகத்தை இன்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். பெண் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் சுமார் 18,720 பெண்கள் தங்கும் வகையில் இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம் தொடர்பான மேலும் பல்வேறு தகவல்களைத் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் தற்போது தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ”  தமிழக முதலமைச்சரின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொழில்துறையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இதுவரையில் தமிழகத்திற்குத் தொழில் முதலீடு வருகையில், தொழிலாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தான் திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

இன்று, மிக முக்கியமான நாள். தமிழகத்திலேயே கிட்டத்தட்ட 18,720 பெண் ஊழியர்கள் தங்கும் வகையில் மிகச் சிறப்பான முறையில் தங்கும் வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண் ஊழியர்களுக்கென இப்படிப்பட்ட பிரமாண்ட தங்கும் விடுதி எந்த ஒரு அரசாலும் ஏற்படுத்தி தரப்படவில்லை. சுமார் 706 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த திறப்பு விழாவில் ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு கலந்துகொள்ள உள்ளார்.

தமிழக அரசு தொடர்ந்து பெண்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைப் போல, பணிபுரியும் பெண்களுக்கு நல்ல பாதுகாப்பான சூழல் கொண்ட  இடங்களை ஏற்படுத்தி தருவதையும் தமிழக அரசு முதல் நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த வளாகத்தில் மொத்தம் 13 பிளாக்குகள் உள்ளன. அதில் ஒவ்வொரு பிளாக்கும் 10 மாடி கட்டிடங்களை கொண்டுள்ளது.   ஒரு கட்டிடத்தில் 1440 பேர் தங்கும் வசதி ஏற்படுத்தபட்டுள்ளது. மொத்தம் 18,720 பேர் இந்த வளாகத்தில் தாங்கலாம். இது ஒரு தனி கிராமம் போன்றது. இந்த வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் மின்சாரத்தின் மூலம் சுடுதண்ணீர் தயாரிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் வகையில் மின் வசதி ஏற்படுத்திதரப்பட்டுள்ளது. இது ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்காக பிரத்தியோகமாக கட்டப்பட்டுள்ள தங்கும் இடமாகும். இதனை பார்த்து மற்ற நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக வரும். இதனால் தமிழகத்தில் தொழில் முதலீடு, வேலைவாய்ப்புகள் பெருகும்.

மொத்தமுள்ள 706 கோடி ரூபாயில், 670 கோடி ரூபாயை தமிழக அரசு அதன் சொந்த நிதி மற்றும் எஸ்பிஐ கடன் மூலம்  அளித்துள்ளது. 20 ஏக்கர் நிலத்தை சிப்காட் வழங்கியுள்ளது.” என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம்  தெரிவித்துள்ள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!