Skip to content
Home » ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் அரசு பள்ளிக்கு தானம்… ஆயி பூரணத்திற்கு முதல்வர் சிறப்பு விருது…

ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் அரசு பள்ளிக்கு தானம்… ஆயி பூரணத்திற்கு முதல்வர் சிறப்பு விருது…

மகளின் நினைவாக ரூ,7 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயி பூரணம் அம்மாளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருது வழங்கினார்.

நாட்டின் 75-வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படை சார்பில் அணிவகுப்பை, ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும், விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தனது மகளின் நினைவாக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. காயல்பட்டினம்

வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்த மீனவர் யாசர் அராபத், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், நெல்லை மாவட்டம் டேனியல் செல்வசிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வெளியான போலி செய்திகளைக் கண்டறிந்து, உண்மை செய்திகளை வெளியிட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜூபேருக்கு மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது. அதிக உற்பத்தி திறன் பெறும் வேளாண்மைக்கான உழவர் நலத்துறையின் சிறப்பு விருது பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசு மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கும், இரண்டாவது பரிசு நாமக்கல் காவல் நிலையம், மூன்றாவது பரிசு பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவல் பதக்கங்கள் விழுப்புரம் எஸ்.பி சசாங்சாய், தெற்கு சென்னை மத்திய நுண்ணறிவுப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் காசி விஸ்வநாதன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் முனியசாமி, மதுரை மண்டல காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட தலைமை காவலர் ரங்கநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக விளையாட்டு, வேளாண்மை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உட்பட தமிழக அரசின் சாதனையை விளக்கும் துறைசார்ந்த 22 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *