சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. உயிரிழப்பும் ஏற்பட்டது. கோடிக்கணக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இந்த சூழலில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ₹6000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும் எனவும், மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணமாக ஹெக்டேருக்கு 17 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் புயல் பாதித்த 4 மாவட்டங்களில் ரூ.6,000 நிவாரணத்திற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. டிச.16 முதல் டோக்கன் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், முன்கூட்டியே இன்று முதல் டோக்கன் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.பாதிக்கப்பட்ட பகுதியின் ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் டோக்கன் தரப்படும்.ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் வரி செலுத்துவோர், அரசு பணியாளர்களின் பெயர் இடம்பெறாது.பட்டியலில் இடம் பெறாதவர்கள் ரேஷன் கடையில் படிவம் பெற்று உரிய ஆதாரங்களுடன் முறையீடு செய்யலாம். டிச.17 முதல் ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகையை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.