காரைக்குடி இடையர் தெருவில் நகராட்சி சார்பில் படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்துக்கு வரும் நாளிதழ்களை எடுத்து வைத்து, தூய்மைப்படுத்த அப்பகுதியைச் சேர்ந்த மீனாம்பாள் (80) என்பவரை நியமித்தனர். இவருக்கு மாத ஊதியமாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இவர் படிப்பகத்தில் இருந்து முந்தைய மாதத்துக்குரிய நியூஸ்பேப்பர்களை எடுத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, ஊதியத்தைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் அவருக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. பலமுறை அலைந்தும் ஊதியம் கிடைக்கவில்லை. இதனால், நேற்று பகல் முழுவதும் ஊதியத்தை வாங்க நகராட்சி அலுவலகத்திலேயே காத்திருந்தார். அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் விரக்தி அடைந்த மூதாட்டி வேலையே வேண்டாம் என படிப்பகத்தின் சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் அவருக்கு 2 மாதங்களுக்குரிய ஊதியத்தை அதிகாரிகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மூதாட்சி மீனாம்பாள் கூறுகையில் ‘‘படிப்பகத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்கிறேன். கடந்த காலங்களில் ஒரே நாளில் ஊதியத்தைக் கொடுத்துவிடுவர். தற்போது எங்களுக்கு வேறு வேலை இருக்கிறது என்று கூறி அலைக்கழித்தனர். இங்கே வந்து செல்ல ஆட்டோவுக்கே ரூ.200 வரை செலவாகி விட்டது. இதனால் வேலையே வேண்டாம் என்று சாவியை ஒப்படைத்துவிட்டேன்’’ என்று கூறினார்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ”நகராட்சியில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது. இந்த சாதாரண விஷயத்தை பெரிதாக்குறீர்களே” என கோபப்பட்டனர். ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் மூதாட்டியின் வாழ்வாதாரப் பிரச்சினையே இந்த ரூ.500 தான் என்பதை அதிகார வர்க்கம் எப்போது புரிந்து கொள்ளுமோ?