மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் தமிழக சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் சிந்தனைசெல்வன், சுதர்சனம், கலைவாணன், மாரிமுத்து, ஜவாஹிருல்லா கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் 10 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் பிரியா மென்பொருள் என்ற உள்ளாட்சி அமைப்புகளில் கணக்குவழக்குகளை பார்பதற்கான மென்பொருள் திட்டம் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்ப்பட்டது. 2011-2014ம் ஆண்டுகளில் ஆதிதிராவிடர்களுக்காக 299 பணிகள் 193 கோடியே 93 லட்சத்தில் திட்டம் தீட்டப்பட்டு ஐஆர்சியின் வழிமுறைகள் பின்பற்றாமல் கட்டுமானம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டு அரசு பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.
ரூ.7 கோடியே 29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 2011-2014ம் ஆண்டுகளில் வேளாண்மைத்துறை மூலம் திருக்கடையூரில் நெய்தல் நிலத்தில் கடல்சார்ந்த பூங்கா அமைப்பதற்கான மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்படாததால் அந்ததிட்டமே கையைவிட்டு போனதாக குற்றம்சாட்டினர். கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பசுமாடுகொடுக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் முறைகேடு நடைபெற்றுள்ளது. 2018ம் ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் நாங்கூர் பெருமாள் கோயிலில் சேவார்த்திகள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டு பராமரிக்கப்படாதது போன்றவற்றால் அரசு பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தில் அடுத்த தலைமுறையினர் பயன்படுத்தும் வகையில் கூடுதலாக இடங்களை கையகப்படுத்தி மிகப்பெரிய பேருந்து நிலையமாக அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்,ரூ. 48 கோடி மதீப்பீட்டில் அமைக்கப்பட்ட பாதாளசாக்கடை திட்டம் எதற்காக அமைக்கப்பட்டது என்று தெரியவில்லை 48 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாதாளசாக்கடை கொண்டுவருவதற்கு அரசுக்கு சட்டமன்ற மதீப்பீட்டுகுழு பரிந்துரைக்கும். கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள் சரியான முறையில் கட்டப்பட்டவில்லை. செப்பனிடப்படவில்லை. மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பெண்கள் தங்குகின்ற விடுதிகளை ஆய்வு செய்ய வேண்டுமென்று கூறியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா, எம்.பி.ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், ராஜ்குமார், பன்னீர்செல்வம், சார்பு செயலாளர் பாலசீனுவாசன் உட்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.