நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், தனது சேமிப்பு பணம் ரூ.45 லட்சத்தை போலியான இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக உதகை மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த (03.08.2024) தேதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக, சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து புகார்தாரரின் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களை பெற்று, குற்றம் சுமத்தபட்டவர்களின் வங்கி எண்ணை கண்டு பிடித்தனர். அந்த வங்கி கணக்கு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா பகுதியைச் சேர்ந்த ஷைலேஸ் குப்தா (56), ருஸ்தம் அலி (37) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்திர ராஜன் , சைபர் க்ரைம் ஆய்வாளர் பிரவீணா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மேற்குவங்க மாநிலம் சென்றனர்,
இதைத் தொடர்ந்து அங்கிருந்த ஷைலேஸ் குப்தா, ருஸ்தம் அலி ஆகிய இருவரையும் கைது செய்து உதகை அழைத்து வந்தனர். பின்னர் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் நிஷா அறிக்கையில் கூறும் போது… பொதுமக்கள் போலியாக இருக்கும் இணையதளங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம், சைபர் குற்றம் தொடர்பாக கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளார்.