திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனிமலை பகுதியில் உள்ள முருகர்கோவில் தெருவில் வசித்து வருபவர் உமா. அவரது கணவர் வெங்கட் (33 ) இவரது மனைவி உமா தேனிமலை பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, குலுக்கல் சீட்டு போன்ற சீட்டு வகைகளை பல்வேறு குழுக்களாக தனித்தனியே 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை சீட்டு நடத்தியுள்ளார்.
இந்த சீட்டில் திருவண்ணாமலை தேனிமலை பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அவர்களது தொடர்பில் உள்ளவர்கள், உறவினர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் உமாவிடம் குலுக்கல் சீட்டு மற்றும் ஏல சீட்டு கட்டிவந்துள்ளனர். மாதந்தோறும் 5 ஆம் தேதி, 10 ஆம் தேதி, 15 ஆம் தேதி, 20 ஆம் தேதி என 5 க்கும் மேற்பட்ட குழுக்களாக சீட்டு நடத்திய உமா சீட்டு எடுத்தவர்களுக்கு உரிய நேரத்தில் பணம் அளிக்காமலும், அக்கம் பக்கத்தில் உள்ள தெரிந்தவர்களிடம் நகை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அடமானம் வைத்து தனது கணவர் வெங்கட் உடன் இணைந்து வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இன்பச் சுற்றுலா சென்று வந்துள்ளார்.
குறிப்பாக உமா மற்றும் அவரது கணவர் வெங்கட் இருவருமே ரீல்ஸ் பிரபலமானவர்கள். தினந்தோறும் விதவிதமாக ஆடைகளை அணிந்து கொண்டும், நகைகளை அணிந்து கொண்டும், வெவ்வேறு இடங்களுக்குச் சென்று ரீல்ஸ் வெளியிடுவது இவர்களது வழக்கம். ஆகவே ஏழை, எளிய மக்கள் உழைத்துக் கட்டிய சீட்டு பணத்தில் தினந்தோறும் பியூட்டி பார்லர் சென்று லட்சக்கணக்கில் செலவு செய்து ஏழை, எளிய மக்களை ஏமாற்றி நகை உள்ளிட்டவைகளை வாங்கி அடமானம் வைத்து ஊர் சுற்றி வருகின்றனர்.
சீட்டு எடுத்த பல நபர்களுக்கும் பணம் தராததால் தொடர்ந்து அவர்கள் கொடுத்த நெருக்கடியின் பேரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாநகரின் தேனிமலை பகுதியில் வீட்டில் இருந்த கணவன் வெங்கட் மற்றும் அவரது மனைவி உமா இருவருமே தலைமறைவாகி உள்ளனர். சில நாட்கள் செல்போனை எடுத்து பணம் தருகிறேன், வீட்டை விற்று தருகிறேன் என கூறிய அவர்கள், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செல்போனை எடுக்காமல் உள்ளதாகவும், அவரது மனைவி பணம் கொடுக்க முடியாது என்ன வேண்டுமானலும் செய்து கொள்ளுங்கள் என பணம் கேட்பவர்களை மிரட்டும் தோனியில் பேசியதால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பொது மக்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தாங்கள் ஏலச்சீட்டு கட்டி ஏமாந்ததாக தங்களது பணத்தை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தனர்.