கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கள்ளக்குறிச்சி வந்தார். அங்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சி. வி. சண்முகம் ஆகியோரும் வந்தனர்.
அதைத்தொடர்ந்து எடப்பாடி அளித்த பேட்டி:
கள்ளசாராயத்தை ஒழிக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளச்சாராயம் குடித்தவர்களின் உயிரை காக்கும் ஓமே பிராசோல்( omeprazole) என்ற உயிர் காக்கும் மருந்து தமிழ்நாட்டில் எந்த அரசு ஆஸ்பத்திரிகளிலும் இல்லை. போதிய மருத்துவர்கள் இல்லை. சென்னையில் இருந்து டாக்டர்களை அழைத்து வந்திருக்க வேண்டும்.
சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நி்வாரணம் முதல்வர் அறிவித்து உள்ளார். இது போதுமானதாக இல்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் மிகவும் எழைகள். கள்ளச்சாராயம் விற்றவர்கள் அனைவரும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. சாராய சாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுக ஏற்கும். இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தலா ஒருவர் வீதம் அரசு வேலை வழங்க வேண்டும்.
நகருக்குள்ளேயே சாராயம் விற்கப்பட்டு உள்ளது. காவல் நி்லையம், கோர்ட் அருகிலேயே சாராயம் விற்பனை நடந்துள்ளது. இந்த கள்ளச்சாராய சாவுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய சாவு குறித்து நேற்று கலெக்டர் பொய்யான தகவல்களை கூறினார். சாராய விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி்னார்.