ஹைதராபாத்தில் புஷ்பா 2 பிரீமியர் காட்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் அவரது குடும்பத்திற்கு இரங்கல் கூறி, நிதியுதவியாக ரூ.25 லட்சம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் நாடு முழுவதும் கடந்த டிச.4ஆம் தேதி வெளியாகி வசூல் வேட்டையைக் குவித்து வருகின்றது புஷ்பா 2 திரைப்படம். இதற்கிடையே, கடந்த புதன்கிழமை இரவு புஷ்பா 2 படத்தின் பிரீமியம் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளது.
அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்ததால், கூட்டம் அலைமோதியது. அப்போது, திரையரங்கிற்கு குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி (35) மற்றும் அவரது மகன் ஸ்ரீதேஜா (9) அந்த கூட்டத்தில் சிக்கி, ரசிகர்களின் காலில் மிதிபட்டு மயக்கமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ரேவதி உயிரிழந்துவிட்டதாகவும், சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தியேட்டர் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு குழு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹைதராபாத் சென்ட்ரல் ஜோன் காவல்துறை துணை ஆணையர் அக்ஷன்ஷ் யாதவ் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா அமைச்சர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி, “மாநிலத்தில் இனி எந்தப் படத்துக்கும் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை” என அறிவித்திருக்கிறார்.
முன்னதாக மய்திரி மூவி மேக்கர்ஸ் இந்த சம்பவம் குறித்து எக்ஸ் பக்கத்தில் வருத்தம் தெரிவித்த நிலையில் அந்த பதிவை புஷ்பா 2 படத்தின் கதாநாயகியான ராஷ்மிக்கா பதிவிட்டு ” I AM SORRY TO HEAR THIS” என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று புஷ்பா 2 படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்த சம்பவத்தை பற்றி தெரிய வந்த நிலையில் பெரும் அதிர்ச்சியடைந்தோம். அந்தச் செய்தியால், புஷ்பா-2 கொண்டாட்டங்களில் எங்களால் தீவிரமாகப் பங்கேற்க முடியவில்லை. ரேவதியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நாங்கள் என்ன சொன்னாலும் , எவ்வளவு பண உதவி செய்தால் அவர்களது இழப்பை ஈடுகட்ட முடியாது. என் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குகிறேன். எங்கள் புஷ்பா-2 படக்குழுவினரும் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.