சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது. அந்த ரயிலில் இருந்து பெரிய பைகளுடன் இறங்கிய சிவப்பு டீ சர்ட் அணிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து சோதனை போட்டனர். சோதனையில் அவர் மதுரையை சேர்ந்த லட்சுமணன் என தெரியவந்தது. அவரது பையில் புதிய தங்க நகைகள் பல பெட்டிகளில் இருந்தது. இது போல ரொக்கப்பணமும் கட்டு கட்டாக இருந்தது.
தங்க நகைகள், பணம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிகிறது. இந்த நகைகள் , நகைகடைகளுக்கு சப்ளை செய்ய கொண்டு வரப்பட்டதா, கடைகளில் நகைகளை கடைகளில் சப்ளை செய்து விட்டு வசூலித்து வைத்திருந்த பணமா என்பது குறித்தும், பணம், நகைகள் யாருக்கு செல்கிறது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.