சென்னை அசோக் நகர் 19-வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகர் (39). பட அதிபரான இவர் ‘நட்புனா என்னானு தெரியுமா’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற தமிழ் படங்களை தயாரித்துள்ளார். இவரது மனைவி பிரபல டி.வி. நடிகை மகாலட்சுமி ஆவார். இவர்களின் திருமண போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பட அதிபர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னையை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகி பாலாஜி கபா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில் அவர், ‘பட அதிபர் ரவீந்தர், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாகவும், இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.200 கோடி என்றும், இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
நானும் உண்மை என்று நம்பி ரூ.16 கோடி வரை முதலீடு செய்தேன். ஆனால் அவர் என்னிடம், போலி ஆவணங்களை காண்பித்து ஏமாற்றி விட்டார். கொடுத்த பணத்தை திரும்ப தர மறுக்கிறார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மனு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி ஆலோசனையின் பேரில் உதவி கமிஷனர் ஜான் விக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், பட அதிபர் ரவீந்தர் சந்திரசேகர் இந்த மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.
இதற்கிடையே அவர் தலைமறைவு ஆனார். இதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் பட அதிபர் ரவீந்தர் சந்திரசேகர் தனது மனைவியான நடிகை மகாலட்சுமியை பார்ப்பதற்கு அசோக் நகர் இல்லத்துக்கு வந்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். வீட்டில் சோதனையும் போட்டார்கள். இதில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், அவருடைய பாஸ்போர்ட், வங்கி புத்தகம் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். பின்னர் அவரை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.