தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளையில் ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
வங்கியின் ஜன்னல்களில் ஒன்றை உடைத்து கேஸ் கட்டரைப் பயன்படுத்தி வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த கண்காணிப்பு காமிராக்களின் இணைப்புகள், அபாய அலாரங்களின் இணைப்புகளையும் துண்டித்து உள்ளனர். பின்னர் அங்குள்ள பல லாக்கர்களை உடைத்து, தங்க, வைர நகைகளைத் அள்ளிச் சென்றனர்.
வளாகத்திற்குள் நுழைய பயன்படுத்தப்பட்ட முறை திறமையாகவும் விவேகமாகவும் இருந்ததால், திருடர்கள் இந்த நடவடிக்கையை பல நாள் நோட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர். அந்த வங்கி கிளையில் இரவு காவலாளிகள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு கைவரிசை காட்டி உள்ளனர். திருடப்பட்ட தங்க நகைகளின் எடை 19 கிலோ இருக்கும் அதன் மதிப்பு சுமார் ரூ. 15 கோடி என கூறப்படுகிறது. சுமார் 4பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து தெலங்கானா போலீசார் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள்ளை போன நகைகள் சுமார் 500 வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது.
.