ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ராமாராவ் (என்.டி.ஆர்.), சினிமாவிலும் கொடி கட்டிப்பறந்தவர். இவரது பிறந்தநாள் நூற்றாண்டு இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி என்.டி.ஆரை கவுரவிக்கும் வகையில், அவரது நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நாணயத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வெளியிட்டார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நாணயத்தை வெளியிட்ட திரவுபதி முர்மு, சினிமா மற்றும் அரசியலில் என்.டி.ஆர். நிகழ்த்திய சாதனைகளை வெகுவாக பாராட்டினார். இந்த விழாவில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு, மனைவி புவனேஸ்வரி, பாலகிருஷ்ணா, வசுந்தரா, மத்திய மந்திரி புரந்தேஸ்வரி உள்பட என்.டி.ஆரின் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
என்டிஆர் நினைவாக வெளியிடப்பட்ட நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செப்பு, 5 சதவீதம் நிக்கல், 5 சதவீதம் துத்தநாகம் ஆகியவை கலந்துள்ளது.