தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் 28ம் தேதி விழுப்புரம் வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்னிய சமூகத்தின் பிரதிநிதியாக முதல் முறையாக உழவர் உழைப்பாளர் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட, மறைந்த முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமியின் நினைவு மண்டபத்தை திறந்து வைக்கிறார்.
இதனையடுத்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அதிமுக ஆட்சிக்காலத்தில் சுட்டு கொல்லப்பட்ட வன்னிய சமூகத்தை சேர்ந்த, வன்னிய இட ஒதுக்கீடு போராளிகளுக்கு நினைவு மண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இது வன்னிய மக்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் காட்டும் மதிப்பை, சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது, எனவே அவர் மீது புழுதி வாரி தூற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கின்ற நேரத்தில் டாக்டர் ராமதாஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அவர் நான்கு ஆண்டு காலம் இட ஒதுக்கீட்டை மறந்து விடுவார். தேர்தல் வரும் போது தான் வன்னிய மக்கள் குறித்து அக்கறை வந்துவிடும்.
அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் நாளன்று காலையில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதை வைத்து, தேர்தலில் அறுவடை செய்தார். அதேபோன்று தற்போதும் அறுவடை செய்யலாம் என துடிக்கிறார், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அறிவார்கள். 20 சதவீதத்தின் மூலம் என்ன நடக்கிறது. 10.5 வந்தால் என்ன இழப்பு வரும் என்பதை மக்கள் அறிவார்கள். எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது புழுதி வாரி தூற்றும் பணியை டாக்டர் ராமதாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் .
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் பின்பற்றியுள்ளார்கள். அது மக்களிடத்திலே வரவேற்பு பெற்றுள்ளது. ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இதை காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமதாஸ் குறித்து பேசிய பேச்சுக்கு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அன்புமணியின் கருத்துக்கு, பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்,
ராமதாஸ் பேசுகிற பேச்சை விட, தமிழ்நாடு முதலமைச்சர் எந்த விதத்திலும் குறைத்து தவறாக அவரை பேசி விடவில்லை. டாக்டர் ராமதாஸ் தான் யாரையும் எடுத்தெறிந்து பேசும் பழக்கம் உள்ளவர். எனவே அன்புமணி இது போன்று பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.