சென்னை ஆளுநர் மாளிகை எதிரே கடந்த 24ம் ேததி தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் (42) 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். அவை தற்செயலாக பக்கத்தில் விழுந்தது. மேலும் 2 பாட்டில்களையும் வினோத்தையும் பாதுகாப்பு போலீசார் பிடித்தனர். பிடிபட்ட ரவுடி கருக்கா வினோத்திடம் நடத்திய விசாரணையில் ‘நீட் விலக்கு மசோதா மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடாததை கண்டித்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறினார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கா வினோத்தை தற்போது 3 நாள் கஸ்டடி எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையின் போது கருக்கா வினோத் அளித்த வாக்குமூலம் என போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது.. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தேனாம்பேட்டையில் தான். வறுமை காரணமாக எனது பெற்றோரால் என்னை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. இதனால் சரியான வேலை கிடைக்காமல் ஊதாரியாக சுற்றி தற்போது நான் ஒரு ரவுடியாக இருக்கிறேன். எனக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளான். மகன் தற்போது 6ம் வகுப்பு படித்து வருகிறான். நான்தான் சரியாக படிக்கவில்லை. எனது மகன் அப்படி இருக்க கூடாது என்று மகனை படிக்க வைக்கிறேன். அவனும் ‘அப்பா நான் டாக்டராக வருவேன்’ என்று அடிக்கடி கூறி வருகிறான். ஆனால் நீட் தேர்வு எழுதினால் மட்டுமே டாக்டராக முடியும் என்கிற உள்ளது. இது எனக்கு மிகவும் மன உளைச்சலாக உள்ளது. நான் குற்ற வழக்கில் சிறையில் இருக்கும் போது, சிறையில் பேப்பர் படிக்கும் பழக்கம் உண்டு. அப்படி படிக்கும் போது, நீட் தேர்வு பயத்தால் தமிழ்நாட்டில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது போன்ற செய்திகளை படிக்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கும். இந்த நீட் தேர்வு இருந்தால், எனது மகன் கண்டிப்பாக டாக்டராக முடியாது. நாங்கள் குப்பத்தில் வளர்ந்தவர்கள். நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு எல்லாம் எங்களால் ரூ.7 லட்சம் வரை செலவு செய்ய முடியாது. எனது மகன் சிறு வயதில் இருந்து ‘நான் டாக்டர்….. நான் டாக்டர்’ என்று கூறிவருகிறான். ஒரு தந்தையாக எனது மகனை பிற்காலத்தில் டாக்டராக்க முடியாது என்று நினைத்து மிகவும் வருந்துகிறேன். தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்து போடாமல் கிடப்பில் போட்டு, எங்களை போன்ற ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் நான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசினேன். மற்றபடி எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அதேநேரம், எனது வாழ்க்கை பாதி நாட்கள் சிறையில்தான் கழித்துள்ளேன். என்னை போன்று சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்று உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கும் இந்த ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே ஆளுநர் நீட் விலக்கு மசோதா மற்றும் சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுதலை செய்ய கையெழுத்து போட வேண்டும். அவரின் கவனத்தை எனது பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கில்தான் பெட்ரோல் குண்டுகள் வீசினேன் என கூறியுள்ளார். இந்தநிலையில் தி.நகர் கமலாலயத்தில் கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில்ஜாமீனில் வெளியேவந்த கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மாம்பலம் போலீசார் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது, வழக்கு தொடர்பாக கருக்கா வினோத் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு நீதிபதி, தள்ளிவைத்தார்.