பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம்(33) என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் விசாரணைக்காக போலீசார் திருவேங்கடத்தை சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, திருவேங்கடம் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை மாதவரத்தில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் காவல் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகிறார். சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம் மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடையவர் திருவேங்கடம். 2015-ல் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் தென்னரசு கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கை 10 நாட்களாக கண்காணித்து கொலை செய்ய திட்டம் தீட்டியதில் ரவுடி திருவேங்கடத்துக்கு முக்கிய பங்கு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.