உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது இருவரையும் போலீசார் அழைத்து சென்றபோது மர்ம கும்பல் அவர்களை நேற்றிரவு சுட்டு வீழ்த்தியது.
அவர்கள் செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாகவும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தின. கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அவர்கள் இருவரும் சுடப்பட்ட சம்பவம் எதிரொலியாக, உத்தர பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளது என ஆதிக் அகமது கூறி வந்த நிலையில், இந்த துப்பாக்கி சூடு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஐ.எஸ்.ஐ. மற்றும் தாவூத் இப்ராகிமுடன் ஆதிக் அகமதுவுக்கு தொடர்பு இருந்து உள்ளது என எப்.ஐ.ஆர். பதிவு தெரிவிக்கின்றது.
ஆதிக் அளித்த வாக்குமூலம் ஒன்றில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மற்றும் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஆகியவற்றுடன் அவருக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்து உள்ளார். ஆனால், சிறையில் இருந்து கொண்டு தங்களால் அவர்களது இடம் பற்றி தெரிவிக்க முடியாது. அந்த இடத்திற்கு அழைத்து சென்றால், அது பற்றி கூற முடியும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர். உமேஷ் பால் கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அந்த முகவரியில் உள்ள நபரிடம் இருந்தே பெறப்பட்டன என கூறியுள்ளனர்.
ஐ.எஸ். அமைப்பின் 227 எண் கொண்ட கும்பல் தலைவராக ஆதிக் செயல்பட்டு வந்து உள்ளார். அவரது சகோதரர் அஷ்ரப்பும் அதில் உறுப்பினராக இருந்து உள்ளார். வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதும் பாதுகாப்பு முகமைகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், ஆதிக்கின் பயங்கவராத செயல்கள் பற்றி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பும் விசாரணை நடத்த கூடிய சூழல் இருந்தது. முக்தார் அன்சாரி என்பவரின் உதவியுடன் நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமுடனும் ஆதிக் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது. இதன்பின் பாகிஸ்தான் வழியேயான ஆயுத கடத்தலில் ஆதிக் கும்பல் ஈடுபட தொடங்கி உள்ளது. ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 0.45 பிஸ்டல் துப்பாக்கி, ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்டவற்றை ஐ.எஸ்.ஐ.யிடம் இருந்து ஆதிக் பெற்றுள்ளார். இவற்றில் 0.45 பிஸ்டல் துப்பாக்கி, உமேஷ் பால் கொலையில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் அவர் தாக்கல் செய்த அந்த மனுவில், முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் தலைமையில் தனிப்பட்ட நிபுணர் குழு ஒன்றை நியமித்து, ஆதிக் மற்றும் அஷ்ரப் படுகொலை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என கோரி உள்ளார். இதனை அவசர வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கோரி உள்ளார். இதனை ஏற்று இந்த மனு மீது வருகிற 24-ந்தேதி விசாரணை நடைபெறும் என கோர்ட்டு அறிவித்து உள்ளது.