புழல் காவாங்கரையை சேர்ந்த ரவுடி சத்யா, கடந்த 10-ந்தேதி இரவு எழும்பூரில் படுகொலை செய்யப்பட்டார். அங்குள்ள குளிர்பான கடை ஒன்றின் அருகில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த சத்யாவை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசின் பிரிட்ஜ் பகுதியில் கொலை செய்யப்பட்ட நாய் ரமேஷ் கொலையில் சத்யா முக்கிய குற்றவாளி இருந்துள்ளார். இதையடுத்து அவரை தீர்த்துக் கட்டுவதற்காக நாய் ரமேசின் ஆதரவாளர்கள் திட்டமிட்டனர்.
இதற்காக கடந்த 8-ந்தேதி நாய் ரமேசின் சமாதியில் சபதம் எடுத்தனர். பின்னர் கொலையாளிகளில் ஒருவரான கிஷோர் தனக்கு தெரிந்த மிசோரம் அழகியான ஜுலியை பகடைக்காயாக பயன்படுத்தி உள்ளார். சத்யாவுடன் அவரை பழக வைத்து ஸ்கெட்ச் போட்டு கொலையாளிகள் தீர்த்துக் கட்டி இருக்கிறார்கள். மிசோரம் அழகிக்கு ரூ.1 லட்சம் பணம் தருவதாக ஆசைகாட்டி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:- நாய் ரமேஷ் கொலை சம்பவத்துக்கு பிறகு சத்யா புழல் காவாங்கரையில் இருந்து தண்டையார் பேட்டை பகுதிக்கு குடி பெயர்ந்துள்ளார். இருப்பினும் சத்யாவை கொலை செய்ய அவரது ஆதரவாளர்கள் திட்டம் தீட்டி வந்தனர். இந்த நிலையில் சத்யாவின் செல்போன் எண் கிஷோருக்கு கிடைத்துள்ளது. அதை வைத்து அவரது இன்ஸ்ட்ராகிராம் ஐ.டி.யை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அந்த ஐ.டி.யை வைத்தே சத்யாவை சிக்க வைப்பதற்கு சதி திட்டம் தீட்டியுள்ளனர்.
இதன்படி கிஷோருக்கு நன்கு அறிமுகமான மிசோரம் அழகி ஜுலியை பயன்படுத்தியுள்ளனர். சத்யாவின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை ஜுலியிடம் கொடுத்த கிஷோர், சத்யா எனக்கு பணம் தர வேண்டியுள்ளது. நான் அழைத்தால் வரமாட்டான். எனவே நீ அவனிடம் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி நேரில் வரவழைக்க வேண்டும். அப்படி செய்துவிட்டால் உனக்கு ரூ.1 லட்சம் பணம் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்தே சத்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஹாய்’ என அழைத்து அழகி ஜுலி பேச தொடங்கியுள்ளார். அப்போது தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதில் மயங்கிய சத்யாவிடம் நேரில் சந்திக்கலாம் என்று கூறி அழைத்துள்ளார்.
இதன்படி தண்டையார் பேட்டையில் இருந்து மோட்டார்சைக்கிளில் எழும்பூருக்கு வந்த சத்யா நீண்ட நேரமாக காத்திருந்து விட்டு ஜுலியிடம் நீ வருவதற்கு தாமதமாகிறது. இன்னொரு நாள் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். அப்போது ஜுலி இன்னும் சிறிது நேரத்தில் நான் வந்து விடுவேன். நீ ஏதாவது சாப்பிடு என்று கூறி இருக்கிறார். இதற்கு பதில் அளித்த சத்யா என்னிடம் பணம் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். இதுபற்றி ஜுலி கிஷோரிடம் கூறி ரூ.1000 அனுப்பச் சொல்லி அந்த பணத்தை தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக சத்யாவின் செல்போனுக்கு அனுப்பி வைத்து விட்டு கிஷோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கிஷோர் உள்ளிட்ட கொலையாளிகள் சம்பவ இடத்துக்கு வந்து சுற்றி வளைத்து சத்யாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக செல்போன் தொடர்புகள் மற்றும் இன்ஸ்டாகிராம் தொடர்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்த போலீசார் மிசோரம் அழகி ஜுலி உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.