சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே விஜயநல்லூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (28). பிரபல ரவுடி. தனக்கு கொலை மிரட்டல் அதிகரித்ததால், கடந்த 3 மாதத்துக்கு முன்பு சோழவரம் அருகே புதூரில் வீட்டை மாற்றிக்கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
விஜயநல்லூரில் உள்ள உறவினர் வீட்டில் ரவுடி அஸ்வின் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். பின்னர் பைக்கில் தனியே வீடு திரும்பினார். விஜயநல்லூர் மெயின்ரோட்டில் மறைந்திருந்த மர்ம கும்பல், அவரது பைக்கை வழிமறித்து ரவுடி அஸ்வினை ஓட ஓட விரட்டி கொலை செய்தது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தற்போது கொலை செய்யப்பட்ட ரவுடி அஸ்வினுக்கும் மற்றொரு ரவுடியான நவீன் ஆகியோருக்கும் இடையே மாமூல் காரணமாக முன்விரோத தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் நவீன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நவீன் கொலைக்கு அஸ்வின் தான் காரணம் என கூட்டாளிகள் பழிக்குப்பழியாக ரவுடி அஸ்வினை வெட்டி கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.