Skip to content
Home » விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

  • by Authour

 நெல்லை  அருகே உள்ளது தச்சநல்லூர். இந்த பகுதியை சேர்ந்தவர்  ராஜ்குமார். இவர் 16 வயதிலேயே  அந்த பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவரின்  மண்டையை உடைத்து விட்டு ஊரை விட்டு ஓடினார். பின்னர் அவர் தேனி மாவட்டம் குமுளி பகுதிக்கு சென்று  அங்கேயே  வசித்து வந்தார்.

இவர் எப்போதும்  தன்னுடன் இளைஞர்கள் பலரை திரட்டிக்கொண்டு ஒரு தாதா போல  தன்னை காட்டிக்கொண்டு சிறு சிறு அடிதடியில் ஈடுபட்டு வந்தார். நண்பர்களுக்கு  ஏதாவது பிரச்னை என்றால் முதல் ஆளாகா அடிதடியில் இறங்குவார் ராஜ்குமார்.  நாளடைவில் இவர் தாதாவாகவே மாறி விட்டார்.

தற்போது இவருக்கு 45 வயது  ஆகிவிட்டது. குமுளியிலேயே இருந்ததால் இவர் குமுளி ராஜ்குமார் ஆனார்.  தனது 19வது வயதிலேயே ஒரு கொலை வழக்கில் சிக்கினார். இதனால் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.

சிறையில்  இருந்து வெளியே வந்த ராஜ்குமார், 2010ல்  தன்னை ஒரு அரசியல்வாதியாகவும், சமூகத் தலைவராகவும் காட்டிக்கொள்ள விரும்பினார். அது தான் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என கருதி ,  தேவேந்திர மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி, அதன் நிறுவனத் தலைவர் என தன்னை காட்டிக்கொண்டார். அதன் மூலம் அவர் எப்போதும் 10 பேருடன் வலம் வரும் அளவுக்கு வளர்ந்தார்.

2010ம் ஆண்டு சென்னையில்  நடந்த ஒரு கொலை வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்தார்.

இவரைப்பற்றி போலீஸ் வட்டாரத்தில் கூறும்போது,  ராஜ்குமார் இப்போது கூலிப்படைகளை ஏவி கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டார். திருச்சி குழுமணியில் நடந்த ஒரு கொலையிலும் இவருக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் தான் திருச்சி மாவட்டம். பெட்டவாய்த்தலை காவல் நிலைய சரகத்தில், கடந்த 15ம் தேதி இரவு   உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 3 காவலர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெள்ளை நிற காரில் துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சிலர் கரூர் -திருச்சி சாலையில் வருவதாக பெட்டவாய்த்தலை உதவி ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெட்டவாய்த்தலை சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக வந்த TN 28 BC 8283 என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற Maruti Suzuki Breeza காரை நிறுத்த முற்பட்ட போது, காரை நிறுத்தாமல் வேகமாக சென்று அருகில் இருந்த போலீஸ் பேரிகார்டில் மோதி நின்றது. உடனே. உதவி ஆய்வாளரும், காவலர்களும் காரின் அருகே சென்ற போது, காரில் இருந்து வீச்சருவாளுடன் இறங்கிய நபர், போலீசாரை பார்த்து தான் பெரிய ரவுடி என்றும், நான் தான் குமுளி ராஜ்குமார், என் காரையே நிறுத்துவீங்களா என்று கேட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு, அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.

காரில் 5 பேர் இருந்ததால் ஜீயபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி, இரவு ரோந்து அதிகாரியான ராம்ஜிநகர் காவல் ஆய்வாளரும், பெட்டவாய்த்தலை உதவி ஆய்வாளரும் இணைந்து கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்வதற்காக தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

அப்போது 16ம் தேதி  பரமக்குடி, ஆதியேந்தல், கண்மாய்கரை அருகே காரில் இருந்த மேற்படி நபர்களான தச்சநல்லூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான குமுளி ராஜ்குமார்  (தேவேந்திர குல மக்கள் இயக்கத்தின் தலைவர்) எனவும், முன் இருக்கையில் இருந்த நபர் இனுங்கூர் பாலு (எ) பாலசுப்ரமணியன் த.பெ முத்து, இனுங்கூர். குளித்தலை தாலுகா, கரூர் மாவட்டம் எனவும் தெரியவந்தது.

பின்னர், மேற்படி நபர்களை கைதுக்கான காரணம் கூறி, கைது செய்து மேற்படி காருடன் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு  கொண்டு  வந்து காரை சோதனை செய்து பார்த்த போது, அதில் நாட்டு துப்பாக்கிகள் -2 வீச்சரிவாள்-2.  நாட்டு வெடிகள் 25 ஆகியவை காரில் இருந்து கைப்பற்றப்பட்டு  பெட்டவாய்த்தலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குமுளி ராஜ்குமார் மற்றும் இனுங்கூர் பாலு (எ) பாலசுப்பிரமணியன் ஆகியோரை சிறையில் அடைத்தனர்.

கைதான 2 நபர்களுடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்ற மேலும் 3 நபர்களை தீவிரமாக தனிப்படையினர் தேடிவருகின்றனர். மேற்படி வழக்கின் A1 எதிரியான குமுளி ராஜ்குமார் என்பவர் மீது மாநிலம் முழுவதும் 5 கொலை வழக்குகளும். 2 கொலை முயற்சி வழக்குகளும். 2 வழிப்பறி வழக்குகளும் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்து குமுளி ராஜ்குமார். காவல் துறையின் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் தேவேந்திர குல மக்கள் இயக்கம் என்னும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் பொறுப்பு வகித்துவருகிறார்.

குமுளி ராஜ்குமார். கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை காவல் துறை கைது நடவடிக்கையிலிருந்து தொடர்ச்சியாக தப்பித்து வந்துள்ளார்.  குமுளி ராஜ்குமாரின் கைதை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அவரது ஆதரவாளர்களான

1) அலெக்ஸ் த.பெ இளங்கோவன், மாகாளிகுடி. சமயபுரம். 2) அருண் த.பெ. வேல்முருகன், மாகாளிகுடி, சமயபுரம், 3) ராமு த.பெ ரமேஷ், மாகாளிகுடி, சமயபுரம், 4) லக்ஷ்மணன் த.பெ ரமேஷ், மாகாளிகுடி. சமயபுரம். 5) வெங்கடாசலபதி த.பெ நீலமேகம், வி.துறையூர், சமயபுரம், 6) கணேசன் (எ) கடலை கணேசன் த.பெ நீலமேகம், வி-துறையூர், சமயபுரம். 7) விநாயகமூர்த்தி த.பெ நீலமேகம், வி.துறையூர். சமயபுரம், 8) வள்ளி அருணன் த.பெ நீலமேகம்.

வி.துறையூர், சமயபுரம், 9) கார்த்திக் த.பெ துரைசாமி, மருதூர், சமயபுரம், ஆகியோர் மீது சமயபுரம் காவல் நிலையத்திலும். 10) சக்திவேல் த.பெ கண்ணன். அண்ணாநகர் காலனி, தொட்டியம், என்பவர் மீது பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திலும், 11) பொன்னடி த.பெ பாலசுப்பிரமணியன். எழுநூற்றுமங்கலம். குளித்தலை 12) சங்கீத்குமார் ஆகியோர் மீது முசிறி காவல் நிலையத்திலும், 13) கோபி த.பெ கணேசன், கீழத்தெரு, கோப்பு என்பவர் மீது சோமரசம்பேட்டை காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்  இந்த மாதத்தில்  தென் மாவட்டத்தில் ஒரு விஐபியை  தீர்த்துகட்டும் நோக்கத்தில் குமுளி கும்பல்  செயல்பட்டு வந்ததாகவும், அதை அறிந்து போலீசார் அவரை மடக்கி விட்டதாகவும் போலீஸ் வட்டாரத்தில்  கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *