காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மதுரமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவரது உண்மையான பெயர் என். குணசேகரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளது.
அவற்றில் 8 கொலை வழக்கு, 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கியிருக்கிறது. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் சேர்ந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். பாஜகவில் மாவட்ட பொறுப்பிலும் அவர் இருக்கிறார். இந்த நிலையில், மனைவியைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் படப்பை குணாவும் பாஜகவில் இணைந்தார்.

அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலையில் படப்பை குணாவை போலீஸார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது படப்பை குணாவை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.