Skip to content
Home » நிலவில் நகர்ந்து…… பணியை தொடங்கியது ரோவர் …. இஸ்ரோ ட்வீட்

நிலவில் நகர்ந்து…… பணியை தொடங்கியது ரோவர் …. இஸ்ரோ ட்வீட்

  • by Authour

நிலவின்  தென் துருவத்தில்,  நேற்று மாலை 6.04 மணியளவில்  இந்தியாவின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவில் தரையிறங்கிய ‘லேண்டரில்’ இருந்து அடுத்த 2 மணிநேரத்தில் அதற்கு உள்ளே இருந்த ரோவர் சாய்வுபலகை மூலம் வெளியே வந்து ஆய்வுப்பணியை தொடங்கியது. இதில் ஆய்வுப்பணிக்குத் தேவையான மின்சாரத்தை அளிப்பதற்காக சூரிய சக்தி தகடுகள் விரிந்து, ஆன்டெனா, கேமராக்கள் ஆகியவை செயல்பட தொடங்கின. ரோவர் கருவி நிலவின் தரைப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்துக்கு ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.  இந்த பணிகளை தற்போது  ரோவர்  செய்ய தொடங்கியது. இதற்காக  ரோவர் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

அது தொடர்பான புகைப்படங்களையும் உடனுக்குடன் பூமிக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறது.   இந்த தகவல்களை இஸ்ரோ இன்று ட்வீட் செய்துள்ளது. இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதுடன், அங்குள்ள மண்ணையும் ஆய்வு செய்யும். பூமியை பொறுத்தவரை, ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதாகும். ஆனால், நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கும். அதாவது, தொடர்ந்து 14 நாட்கள் பகல், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும்.

இதை கருத்தில் கொண்டுதான், பகல் தொடங்கும் முதல் நாளில் லேண்டர் கருவியை  இந்தியா தரையிறக்கியது. அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை வாங்கிக் கொண்டு, லேண்டர் கருவி செயல்படும். ரோவர் கருவியும் இடைவிடாமல் உற்சாகமாக தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ளும். அனைத்து ஆய்வுகளையும், நிலவில் பகல் பொழுதான 14 நாட்களுக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும் என்பதால், லேண்டர் கருவிக்கு சூரிய ஒளி கிடைக்காது. அதனால், அது செயல் இழந்து போகும். ரோவர் கருவியாலும் இருட்டில் எதுவும் செய்ய முடியாது. எனவே, மொத்த ஆய்வுப் பணியும் 14 நாட்களுக்குள் முடிந்துவிடும். அடுத்து, நிலவுக்கு சந்திரயான்-4 அனுப்பும் பணியை இஸ்ரோ மேற்கொள்ள இருக்கிறது. சந்திரயான்-4 மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில் அனுப்பப்படும். அதில், அனுப்பப்படும் கருவி மூலம் நிலவின் தரைப் பகுதியில் உள்ள கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, ஆராய்ச்சிக்காக பூமிக்கு கொண்டுவரப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *