திருச்சி மாவட்டத்தின் அடையாளமாகவும், திருச்சி மக்களின் முக்கிய வழிபாட்டு தலமுமாக உச்சிபிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
உச்சிபிள்ளையாரை தரிசிக்க வேண்டுமானால் சுமார் 437 படிக்கட்டுகள் ஏறி மேலே செல்லவேண்டும். இதனால் வயதானவர்கள் உச்சிபிள்ளையாரை தரிசிக்க முடிவதில்லை. எனவே மலைக்கோட்டைக்கு ரோப்கார் வசதி செய்வது குறித்தும், இழுவை ரயில் வசதி செய்வது குறித்தும் தமிழக அரச பல கட்டங்களாக ஆய்வுகள் மேற்கொண்டது.
தற்போது தி.மு.க அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்தது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி மலைக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது.அந்த குழுவினர் ஆய்வு செய்து, திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் அமைக்க போதுமான இடமில்லாததால், சாத்தியமில்லை என்று கூறிவிட்டது. அதற்கு மாற்றாக, லிப்ட் அமைக்கலாமா? என்பது குறித்து மாற்றுத்திட்டத்தை பரிசீலித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் நாடு முழுவதும் மலைப்பிரதேசங்கள், மலைக்கோவில்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்தை எளிதாக்குவதற்கு, ரோப் கார் வசதியை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் 22 இடங்களில், ‘ரோப் கார்’ வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
குறிப்பாக திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ரோப்கார் வசதி செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகளை மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைத்து உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கி உள்ளது. சாத்தியமுள்ள இடங்களின் பட்டியல் 2 மாதங்களில் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளன. இந்த ஆணையம் அறிக்கையை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.