சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக ரூட் தல பிரச்னை இருந்து வருகிறது. சில மாதங்கள் சென்னை மாநகர போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையால் ரூட் தல பிரச்னை சற்று குறைந்து இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி முடிந்து பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ முதலாமாண்டு படித்து வரும் சவுகார்பேட்டை பெருமாள் கோயில் 6வது தெருவை சேர்ந்த ராகேஷ் ஆனந்த்(18) என்பவர், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மாநகர 15ஜி பஸ்சில் பயணம் செய்தார். அப்போது மாநில கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வரும் அரக்கோணம் புதுக்கண்டிகை கைனாபுரத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி(20), மாநில கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே முருக்கம்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த பூபதி(19), மாநில கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் திருத்தணி டி.வி.புரம் பெரியதெருவை சேர்ந்த ஆகாஷ்(18) ஆகியோர் பச்சையப்பன் கல்லூரி மாணவன் ராகேஷ் ஆனந்திடம் இது எங்கள் ரூட், நீ எதற்கு வந்தாய் என்று தகராறு செய்துள்ளனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாநில கல்லூரி மாணவர்கள் 3 பேரும் கையில் வைத்திருந்த கத்தியால் பச்சையப்பன் கல்லூரி மாணவன் ராகேஷ் ஆனந்தை சரமாரியாக பஸ்சுக்குள்ளேயே குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதை பார்த்த பயணிகள் அச்சத்தில் அலறி பஸ்சில் இருந்து வெளியே ஓடினர். அப்போது காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த மாணவன் ராகேஷ் ஆனந்தை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மாணவன் ராகேஷ் ஆனந்த் சம்பவம் குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து பச்சையப்பன் கல்லூரி மாணவனை கத்தியால் குத்திய மாநில கல்லூரி மாணவர்கள் விநாயகமூர்த்தி, பூபதி, ஆகாஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகளும் பறிமுதல் செய்தனர்.