இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்தும், சுப்மன் கில்லும் களம் புகுந்தனர். முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டிய இவர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டனர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மைதானமும் பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்தது. அதிரடியாக ஆடிய இவர்கள் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விரட்டினர். இதனால் 20 ஓவர்களில் இந்தியா 165 ரன்கள் குவித்தது. தொடர்ந்து அதிரடியில் இறங்கிய இந்த ஜோடியை கட்டுப்படுத்த முடியாமல் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் முதலாவதாக சதம் அடித்தார். இதையடுத்து சுப்மன் கில்லும் சதம் அடித்து அசத்தினார். இது ரோகித்துக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 30வது சதமாக அமைந்தது. தொடர்ந்து இந்த இணை ஆடி வருகிறது. தற்போது வரை இந்தியா 26 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 212 ரன்கள் குவித்துள்ளது.
கேப்டன் ரோகித் 83 பந்துகளில் சதம் அடித்தார்.101 எடுத்த நிலையில் ரோகித் போல்ட் ஆகி வெளியேறினார். அவரது சதத்தில் 6 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் கில் 112 ரன்னில் அவுட் ஆனார் அதை்தொடர்ந்து கோலி, இஷான் கிஷன் ஆகியோர் ஆடி வந்தனர். பின்னர் கிஷனும் அவுட் ஆனார். அவருக்குப்பதில் சூரியகுமார் யாதவ் வந்தார். 35 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது.