இந்திய வெளிவிவகாரத் துறை மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி பென்னி வாங்கை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கையெழுத்திட்ட பேட் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார். இதற்கு பதிலாக, மத்திய மந்திரி ஜெய்சங்கர் பெயர் எழுதிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஒன்றை வாங் பரிசாக வழங்கினார். இந்த பயணத்தில் ஆஸ்திரேலிய செயல்திட்ட கொள்கை மையம் மற்றும் இந்தியாவின் ஓ.ஆர்.எப். சார்பில் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு முக்கிய உரையாற்ற உள்ளார்.
இதில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நல்லுறவு பற்றி ஆலோசிக்கப்படுவதுடன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளங்களுக்கான திறந்த நிலையிலான மற்றும் வெளிப்படை தன்மையுடன் கூடிய ஆழ்ந்த ஒருங்கிணைப்பு மற்றும் பங்காற்றுவது எப்படி? என்பது பற்றி இரு நாடுகளும் விவாதிக்க உள்ளன. இந்த பேச்சுவார்த்தையின்போது, மந்திரிகள் மற்றும் உயர்மட்ட அரசு பிரதிநிதிகள், அவற்றுடன் தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் தொடர்புடைய நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.
ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்று உள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தையானது புதுடெல்லியில் வருகிற மார்ச் 1-ந்தேதி நடைபெற உள்ள ஜி-20 மந்திரிகள் மட்டத்திலான கூட்டத்திற்கு வழிவகுக்கும் வெளிப்பாடான நிகழ்ச்சியாக இருக்கும். இந்த பேச்சுவார்த்தையின்போது, புவிஅரசியல், தொழில் நுட்பம் மற்றும் பொருளாதாரம் தொடர்புடைய முன்னணி பிராந்திய நிபுணர்களின் முக்கிய உரைகளும் இடம் பெற உள்ளன. இந்த பேச்சுவார்த்தையானது, உலக அளவில் சட்டம் மற்றும் ஒழுங்கில், டிஜிட்டல் துறை ஏற்படுத்திய பின்விளைவுகளை பற்றிய ஆலோசனை மேற்கொள்ளும் இணையதளம் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களை பற்றிய வருடாந்திர மாநாடு ஆகும்.