சென்னையில் ரெயில் சேவைக்காக வேளச்சேரி-பரங்கிமலையை இணைப்பதற்காக ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்தப்பணி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ரெயில்வே பாதைக்கு மேலே அமைக்கப்படுகிறது. இதற்காக உயர்மின் அழுத்த ஒயர்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு பணிகள் நடக்கிறது. அந்தவகையில் நேற்று காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை இந்தப்பணி நடந்தது. இதில் 6 இரும்பு பாலங்களில் 3 இரும்பு பாலங்கள் மட்டுமே தூண்களில் பொருத்தப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 3 இரும்பு பாலங்கள் இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது.
இதனால் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இரவு 10.20 முதல் 11.59 மணி வரை இயக்கப்படும் 5 மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் எழும்பூரில் இருந்து இரவு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 3-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. குறிப்பாக, இரவு 10.55 மணிக்கு புறப்படும் எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்-16179), இரவு 11.15 மணிக்கு புறப்படும் எழும்பூர்-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (16159), இரவு 11.35 மணிக்கு புறப்படும் எழும்பூர்-திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (16179), ஆகிய 3 ரெயில்களும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
அதேபோல் இரவு 11.55 மணிக்கு எழும்பூரில் இருந்து தாம்பரம், விழுப்புரம் வழியாக சேலத்திற்கு இயக்கப்படும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) மாற்றுப்பாதையான எழும்பூரில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.