திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் உள்ள தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கு பகுதியில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பிரம்ம தீர்த்தம் என்ற (சோம ரோகணி) தெப்பகுளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தின் நடுவில் அழகிய நீராழி மண்டபம் விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு தெப்பத்திருவிழா கடந்த மாதம் 26 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்றிரவு நடைபெற்றது.
இதற்காக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மாலை 6.25 மணிக்கு சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மலைக்கோட்டை உள்வீதி, சின்னக்கடை வீதி என்.எஸ்.பி.ரோடு வழியாக தெப்பக்குளத்தை வந்தடைந்தனர்.
பின்னர் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் இரவு 8.05 மணிக்கு சுவாமிகள் எழுந்தருளினர்.தெப்பத்தை 5 முறை வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து தெப்பக்குளத்தின் நடுபகுதியில் உள்ள நீராழி மண்டபத்தில் சுவாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.