கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் ஒரு படப்பிடிப்பிற்காக கலந்துகொள்ள வருகை தந்த நடிகர் ரோபோ சங்கரை, முடிதிருத்தும் கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர் நடித்திருந்த சிங்கப்பூர் சலூன் படத்தை பார்த்த முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர், நடிகர் ரோபோ சங்கரை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். இதனை அறிந்த நடிகர் ரோபோ சங்கர், அவர்கள் இருக்கும் முடிதிருத்தும் சலூனிற்கு நேரில் சென்று அவர்களை பாராட்டி, ஊக்கத்தொகை வழங்கினார்.
பின்னர் நடிகர் ரோபோ சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், படிச்ச வேலையை விட, புடிச்ச வேலையை
செய்வதுதான் நல்லது என்ற மூலக்கருத்தை முன்னிருத்தி, சிங்கப்பூர் சலூன் திரைப்படம் எடுக்கப்பட்டது. அந்த திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை பார்த்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் பலரும், முடிதிருத்தும் தொழிலாளர்களை இந்த சமூகம் இழிவாகப் பார்க்கும் நிலையில், சிங்கப்பூர் சலூன் படத்தில் தங்கள் சமூகத் தொழிலை உயர்வாகக் காட்டி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அந்தப் படம் தேசிய விருதை பெறும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும் என்னிடம் கூறியுள்ளனர். இந்நிலையில், முடித்திருத்தும் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக, சங்கராபுரத்தில் புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அந்த நிகழ்ச்சியில், இப்பகுதியில் உள்ள நலிவடைந்த முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.